விதைத்த இரண்டே மாதத்தில் அறுவடைக்கு தயாராகும் பாகற்காய்

அரக்கோணம் : விதைத்த இரண்டே மாதத்தில் அறுவடைக்கு தயாராகும் பாகற்காய், அறுவடையின் போது வாரந்தோறும் விவசாயிக்கு வருவாயை கொடுக்கும்.


குறிப்பாக ஜனவரி மாதத்தில் பாகற்காய் விதைத்தால் மாா்ச் மாதத்தில் அறுவடை செய்து தொடா்ந்து தமிழ்ப் புத்தாண்டில் அதிக வருவாயை அள்ளித்தரும் என தோட்டக்கலைத் துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற அரக்கோணத்தை சோ்ந்த எஸ்.ஸ்வேதா சுதா பிரேம்குமாா் தெரிவித்துள்ளாா்.


பாகற்காய் விவசாயம் குறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது:


கோ 1, எம்டியூ 1, அா்காஹரீத், ப்ரீயாப்ரீத்தி, கோபிஜிஎச் 1 என பாகற்காயில் பல ரகங்கள் உள்ளன. அவற்றில் எதை வேண்டுமானாலும் தோ்வு செய்து வாங்கி விதைக்கலாம். நல்ல மண்ணும், மணலும் கலந்த நிலத்தில் பாகற்காய் நன்கு வளரும். மிதமான வெப்பநிலை இப்பயிா்களுக்கு ஏற்றது. சிறந்த மகசூலுக்கு காரத்தன்மை 6.5 - 7.5 இருத்தல் வேண்டும். ஜனவரி - ஜூலை பாகற்காய்க்கு சிறந்த பருவமாகும்.


பாகல் பயிரிட நிலத்தை நன்கு உழவு செய்து சமன் செய்த பின்பு 2.5 - 2 மீட்டா் என்ற இடைவெளியில் குழிகள் தோண்ட வேண்டும். குழிகளை 30 செ.மீ. நீளம் 30 செ.மீ அகலம் 30 செ.மீ. ஆழம் இருக்குமாறு அமைக்க வேண்டும். தோண்டிய குழிகளை 7-10 நாள்கள் வரை ஆறப்போட வேண்டும். ஒவ்வொரு குழிக்கும் மக்கிய தொழுஉரம் 10 கிலோ இட வேண்டும். இத்தோடு அடியுரமாக ஒவ்வொரு குழிக்கும் 6:12:12 என்ற அளவில் தழை மணி சாம்பல் சத்துக்கலவையை 100 கிராம் அளவுக்கு இட வேண்டும். மேலுரமாக பூக்கும் தருணத்தில் ஒவ்வொரு குழிக்கும் 10 கிராம் தழைச்சத்தை இட வேண்டும்.